Alaioli
தஷ்மிக்கா தியாகு
மஞ்சோங், மே. 26- பேராக் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான டத்தோ சிவநேசன் சுழற்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி மிகுந்த உற்சாகத்துடனும் விமரிசையாகவும் நடைபெற்றது.

மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், சித்தியவான் ரேஞ்சர்ஸ் எஃப்சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற மாபெரும் இந்தக் கால்பந்தாட்டப் போட்டி, சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்க மைதானத்தில் நேற்று 24.05.2026ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை மிகுந்த உற்சாகத்துடன் நடந்தேறியது.

பேராக் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில், அவரது பிரதிநிதியாக சித்தியவான், பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினர் வோங் மேய் இங் கலந்து கொண்டு இப்போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அவர் தமதுரையில், மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டிலும் சாதனைகள் பல படைப்பது இன்றைய காலத்தின் முக்கிய தேவையாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.மேலும் விளையாட்டு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது ஒற்றுமை, தலைமைத்துவம், தன்னம்பிக்கை போன்ற உயரிய பண்புகளையும் வளர்க்கும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத் தலைவர் மகாலிங்கம் கோவிந்தசாமி, இந்திய மாணவர்கள் உலகளவில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் மஞ்சோங் மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்பட்ட இப்போட்டி, இம்முறை மாநில அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டு மஞ்சோங், கீழ்ப்பேராக், பாகான் டத்தோ, பத்தாங் பாடாங் என 4 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் என்று கூறினார்.

12 வயதிற்குட்பட்ட இந்த கால்பந்தாட்டத்தில் ஆண்கள் பிரிவில் 17 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 19 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 11 அணிகளும் களமிறங்கி தங்களது திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தின.
ஆண்கள் பிரிவில் பாகான் டத்தோ மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி தமிழ்ப்பள்ளி அணி முதலிடம் பெற்று டத்தோ சிவநேசன் சுழற்கிண்ணத்தை வென்றது. மகா கணேசா வித்யாசாலை அணி இரண்டாமிடத்தையும் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி அணி மூன்றாமிடத்தையும் கைப்பற்றின.

பெண்கள் பிரிவில் கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி அணி இரண்டாமிடத்தையும், வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி அணி மூன்றாமிடத்தையும் வென்றன.
மேலும் ஆண்கள் பிரிவில் மகா கணேசா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனன் ஜெரெமியா ராஜ் கிருஷ்ணன் சிறந்த கோல் காவலராகவும், பாரதி தமிழ்ப்பள்ளி மாணவன் சர்வின் முத்துக்குமார் சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல் பெண்கள் பிரிவில் பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி ஹஸ்வினி சிவநேசன் சிறந்த கோல் காவலராகவும், கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி டாஷினி சசிதரன் சிறந்த சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டிக்காக 20,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கிய டத்தோ சிவநேசனுக்கு சங்கத் தலைவர் மகாலிங்கம் தமது நெஞ்சார்ந்த நன்றியை பதிவுச் செய்துக் கொண்டார்.
மலேசிய கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன், மஞ்சோங் மாவட்ட கல்வி இலாகாவின் அதிகாரிகள், மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் சுப்ரணியம் ரெங்கசாமி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தேசிய கால்பந்தாட்டப் பயிற்றுநர் நந்தகுமார் காளியப்பன், பெற்றோர் மாணவர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற நன்கொடை வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய அனைவருக்கும் மகாலிங்கம் தம் நன்றியைப் புலப்படுத்திக் கொண்டார்.-Alaiolinews








தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.