Alaioli
கஷ்டங்களைக் கடந்து இசை உலகில் சாதித்த தம்பதிகள்.

கே.கே.ஆர் தேவி

ஜோகூர் பாரு, மே 14 –“சோர்வும் சவால்களும் வாழ்க்கையில் வந்ததே தவிர, ‘என்னால் முடியாது’ என்ற எண்ணம் மட்டும் ஒருபோதும் என் மனதில் இடம் பெறவில்லை,” என்று தன்னம்பிக்கையுடன் கூறும் கார்த்தியாயினி @ சித்ரா, இன்று பல பெண்களுக்கு உத்வேகமான முன்னுதாரணமாக மாறியுள்ளார்.




மலேசிய இந்தியச் சமூகநல இயக்கத்தின் (மீவா) தலைவர் டத்தோ கே. புருஷோத்தமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “உல்லாசம் இசை ஃபெமிலி” இசை அகாடமியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.18 வயதிலேயே தனித்து நின்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய சித்ரா, கடந்த 28 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் உற்பத்தித் துறையில் பணியாற்றி வருகிறார். குடும்பப் பொறுப்புகள், வேலைப் பளு, வாழ்க்கைச் சிரமங்கள் போன்ற பல தடைகளைச் சந்தித்தபோதிலும், இசை மீது கொண்டிருந்த ஆர்வத்தை அவர் ஒருபோதும் விடவில்லை.




இசைக்கான ஆழ்ந்த ஈர்ப்பின் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் இசைப் பயிற்சி மையம் ஒன்றைப் பதிவு செய்து நடத்தத் தொடங்கிய அவர், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனது நீண்டநாள் இலட்சியமாக இருந்த இசை அகாடமியை தற்போது உருவாக்கியுள்ளார்.


“ஒருநாள் எனக்கென ஒரு இசை அகாடமி அமைக்க வேண்டும் என்பது என் மனதில் நீண்டகால கனவாக இருந்தது. இன்று அது நிஜமாகி நிற்பது இன்னும் நம்ப முடியாத உணர்வாக இருக்கிறது. இந்த நிலையை அடையப் பல கஷ்டங்களையும் தோல்விகளையும் கடந்து வந்திருக்கிறேன்,” என்று அவர் உணர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

நான்கு பிள்ளைகளின் தாயான அவர், சிங்கப்பூரில் வேலை செய்து குடும்பத்தையும் கவனிப்பது எளிதான விஷயம் அல்ல என்றும், தனது கணவர் வேலு, அவரின் ஆதரவும் ஊக்கமும் தான் தொடர்ந்து முன்னேற உதவியதாகவும் தெரிவித்தார்.


“என் சேமிப்பு பணம் முழுவதையும் இந்த அகாடமிக்காக முதலீடு செய்தேன். இது மிகவும் பெரிய முடிவு. ‘இவ்வளவு ஆபத்தை ஏன் எடுக்கிறாய்?’ என்று என் பெற்றோர்களே கேட்டார்கள். ஆனால் இது என் கனவு என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும்; அதை அடைய முயற்சி அவசியம்,” என்றார்.


பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும், தோல்விகளைக் கண்டு பின்வாங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.“ஒவ்வொரு தோல்வியும் என்னை மேலும் வலிமையாக்கியது. பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே கட்டியெழுப்பக் கற்றுக்கொள்ள வேண்டும். கனவுகளை வைத்திருங்கள், அதற்காகத் தொடர்ந்து உழையுங்கள், முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள்,” என்று அவர் ஊக்கமூட்டும் கருத்துகளைப் பகிர்ந்தார்.புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த இசை அகாடமியில் பாடல் பயிற்சி, இசைக் கல்வி உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் சித்ரா தெரிவித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News