Alaioli
“எனது பாதுகாப்பு என் உரிமை” – பெண்களின் உரிமை, பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே.கே.ஆர்.தேவி

ஜோகூர் பாரு, மே 15 - பெண்கள் தங்களின் உரிமைகள், பாதுகாப்பு, உடல்நலம், மன உறுதி ஆகியவற்றை தெளிவாக அறிந்து தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் “எனது பாதுகாப்பு என் உரிமை” என்ற தலைப்பிலான பெண்கள் அதிகாரமளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


மலேசிய அருளொளி நலவாரிய அமைப்பின் ஜோகூர் மாநில மாமன்றம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, கடந்த மே 9ஆம் தேதி ஜோகூர் பாருவிலுள்ள ஜோதிக் அரங்கத்தில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


பெண்கள் எந்த சூழலிலும் அச்சமின்றி, தங்களது உரிமைகளை உணர்ந்து பாதுகாப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. குடும்ப சூழல், பணியிடம், இணையவழி பாதுகாப்பு, பெண்களின் சட்ட உரிமைகள், உடல்நல கவனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.


வழக்கறிஞரும் சட்ட ஆலோசகருமான ஜெ. சந்திரிகா பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகள், அவர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு உரிமைகள் குறித்து விளக்கமளித்தார். டாக்டர் உமையாள் சுப்ரமணியம் சிதம்பரம் பெண்களின் உடல்நலம், மனநல பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.


அதேவேளை, கமலா கோபால் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து எடுத்துரைத்தார். எழுத்தாளரும் ஊக்கவுரையாளர்ுமான வனிதா ராமகிருஷ்ணன் பெண்கள் தன்னம்பிக்கை, தைரியம், சுய முன்னேற்றம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் ஜோகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம், கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜோகூர் மாநில ம.இ.கா தலைவருமான ரவீன் குமார் கிருஷ்ணசாமியின் பிரதிநிதியாக அவரது சிறப்பு அதிகாரி சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.


மேலும் டத்தோ புவனேஸ்வரன் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டு பெண்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கு மலேசிய இந்து சங்கம் ஜோகூர் பாரு மன்றம், கணேஷ் மூலிகை நிறுவனம், தம்போய் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், உமா மருத்துவ மையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கின.


நிகழ்ச்சியை முன்னின்று ஒருங்கிணைத்த ஜோகூர் மாநில அருளொளி மாமன்றத் தலைவர் யசோதா முனுசாமி, நிகழ்ச்சியின் வெற்றிக்கு பங்களித்த பேச்சாளர்கள், ஆதரவாளர்கள், நிர்வாகிகள், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.


பெண்களின் பாதுகாப்பு, கல்வி, உரிமை உணர்வு, தன்னம்பிக்கை ஆகியவற்றை மேம்படுத்தும் இத்தகைய முயற்சிகள் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும் என்றும் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கப்பட்டது.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News