Alaioli
தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்” – ஜொகூரில் விழிப்புணர்வு பரப்புரை தீவிரம்

கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு, மார்.8-ஜொகூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் ஜொகூர் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கம் “தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்” எனும் விழிப்புணர்வு பரப்புரையை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு முதலாம் வகுப்பில் சேரவிருக்கும் மாணவர்களை பதிவு செய்வதற்கான இறுதி நாள் இம்மாதம் 31ஆம் தேதி என கல்வியமைச்சு அறிவித்துள்ளதை முன்னிட்டு, இந்த பரப்புரையை மக்கள் மத்தியில் தீவிரப்படுத்தியுள்ளதாக இயக்கத்தின் தலைவர் கல்விச் செம்மல் நடராஜா சி. காளிமுத்து தெரிவித்தார். இந்த முயற்சி கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டதாகவும், தமிழ்ப்பள்ளி கல்வியின் அவசியத்தை பெற்றோருக்கு எடுத்துரைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், இந்தப் பரப்புரைக்கு உறுதுணையாக இருந்து செய்திகளை வெளியிட்டு ஆதரவு வழங்கிய மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ்மலர் உள்ளிட்ட நாளிதழ்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும், நிருபர்களுக்கும் இயக்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.


இவ்வாண்டிற்கான பரப்புரையின் தொடக்க நிகழ்வாக அண்மையில் மாசாய் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக இயக்கத்தின் செயலாளர் தமிழ்ச்சுடர் இராம சேதுபதி தெரிவித்தார். தமிழ்ப்பெற்றோரிடையே விழிப்புணர்வு ஒரே நாளில் உருவாகாது; அது மெதுவாகவும் தொடர்ச்சியாகவும் வளர வேண்டிய ஒன்று என்ற நம்பிக்கையுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.


இதற்கிடையில், ஜொகூர் மாநிலம் முழுவதும் நடைபெறும் பல்வேறு சமூக மற்றும் கல்வி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ்ப்பள்ளி கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பணியில் இயக்கம் ஈடுபட்டு வருவதாக இயக்கத்தின் செயலவை உறுப்பினர் தமிழ்முத்து கே. பூபாலன் தெரிவித்தார். அதேபோல் தமிழ்ப்பள்ளிகளில் நடைபெறும் பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் “தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்” என்ற கருத்தை பெற்றோர்கள் மத்தியில் பரப்பி வருவதாக மற்றொரு செயலவை உறுப்பினர் இனியர் சு. சீனிவாசகம் கூறினார்.


மேலும் தகவல்களுக்கு முனைவர் சுரவி (013-7689 379) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

Post Image

Leave a Comment
Trending News