Alaioli
பள்ளி வயதிலேயே மாணவர்களுக்கு வர்த்தக அறிவை வளர்க்க வேண்டும்   எண்ட்ரிகோ  இயக்குநர்  ராஜேந்திரன்

சத்யா பிரான்சிஸ்

ஜார்ஜ் டவுன். பினாங்கு. மார்ச் 8 பள்ளி வயதிலேயே மாணவர்களுக்கு வர்த்தக அறிவை ஊட்டி வளர்க்க வேண்டும். பொருளாதார நிலையில் தமிழர்கள் உயர்நிலையில் தலை நிமிர்ந்து நடக்கத் தேவையான நடவடிக்கைகளை எங்கள் நிறுவனம் நடத்தி வருகிறது. அதன் ஒரு கடமையில் தான் \'இளைய வர்த்தகர்-03\' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்துகிறோம்  என தொழிலதிபர் வி. ராஜேந்திரன் கூறினார். 


பள்ளி வயதிலேயே சிறுவர்களின் சிந்தனையில் ஒரு சிறிய விதை விதைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சிறு சிறு வியாபாரத் துறையில் அவர்கள் எப்படி வெற்றி பெறுவது போன்ற ஆலோசனைகளை வழங்குகிறோம். வியாபாரம் என்றால் என்ன? லாபம் என்றால் என்ன? அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? போன்ற அடிப்படை சிந்தனையை அவர்கள் மத்தியில் உருவாக்குகிறோம்.


இன்றைய \"இளைய வர்த்தகர் 3.0\" பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நூறு வெள்ளி தருகின்றோம். இதை அவர்கள் எப்படி பயன்படுத்தி சிறு வியாபாரம் செய்து லாபம் ஈட்ட முடியும் போன்ற விவரங்களைச் சொல்லித் தருகிறோம். அவர்கள் அடையும்  சிறு லாபத்தை எப்படி அடுத்தடுத்து அதிகரிக்க முடியும் என்பதையும் விளக்குகிறோம் என மாணவர்களுக்குப் பயிற்சியை வழங்கிய எண்ட்ரிகோ நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி எஸ். கே. சுந்தரம் கூறினார்.


உன் வாழ்க்கை உன் கையில் நீ வெற்றியடைய துணிவு, உழைப்பு, விவேகம், விடாமுயற்சி, முக்கியம் என சிறிய வயதில் எனது தந்தை கூறினார். இன்று சிறு தொழில் முதல் பெரிய தொழில் வரை வெற்றி பெறுவதற்கு இந்த குணங்கள் மிகவும் அவசியம். சிறுவர்கள் செலவு செய்யும் முன்பு சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே வியாபாரத்தின் முதல் ரகசியம். மாணவர்களுக்கு இன்று தரப்படும் நூறு வெள்ளி மூலதனத்தைக் கொண்டு மூன்று வாரத்துக்குள் அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்த ஹென்றிகோ நிறுவனத்திற்கு நன்றி கூறுகிறேன் என தமது வாழ்த்துரையில்  பினாங்கு மாநில வீடமைப்பு சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு கூறினார்.


மேலும் அவர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு ஹென்றிகோ நிறுவனத்தின் சார்பில் நூறு வெள்ளி ரொக்கம் வழங்கினார்.இரண்டு ஊழியர்களுடன் தொடங்கிய எனது நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளாக வர்த்தகத் துறையில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு இன்று 230 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக நெய், பால் மாவு, சோயா, மை காப்பி, லீப் ஆன் மிகூன், அப்பளம், மாப்பிள்ளை உளுந்து,  சமையலுக்கான மளிகைப் பொருட்கள்,  பூஜைக்கானப் பொருட்கள் எனப் பல வகையானத் தரமான பொருட்களைத் தயாரித்து நாடு முழுவதும் ஆறு நகரங்களில் கிளைகள் அமைத்து வினியோகம் செய்து வருகிறோம் என ராஜேந்திரன் மேலும் கூறினார்.


இன்று காலை ஜாலான் உத்தமாவில் உள்ள பெஞ்ஞாயாங் மக்கள் மண்டபத்தில் ஹென்றிகோ நிறுவனம் நடத்தும்  இளைய வர்த்தகர்-3 கருத்தரங்கில்,  பினாங்கு மாவட்டத்தில் உள்ள ஏழு தமிழ்ப் பள்ளிகளில் இருந்து நான்காம், ஐந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டதாக அவர் செய்தியாளரிடம் கூறினார்.


எண்ட்ரிகோ நிறுவனம் நாட்டில் உள்ள 25 நகரங்களில் இதுபோன்ற பயிற்சியை பல்வேறு இடங்களில் நடந்தி வந்துள்ளது. இந்த பயிற்சிகளில் பல்கலைக்கழக மாணவர்கள்,  தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்,  தமிழ்ப் பள்ளி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


மாணவர்கள் அனைவரும் "நான் ஒரு இளைய வர்த்தகர்" என்ற பெயர் பதிக்கப்பட்ட டிஷர்ட் அணிந்திருந்தனர். இன்று நடைபெற்ற இளைய வர்த்தகர் கருத்தரங்கிற்கு 30 ஆயிரம் வெள்ளி வரை எண்ட்ரிகோ நிறுவனம் செலவிட்டுள்ளது.இந்த நிகழ்வில் கல்யாணசுந்தரம், டத்தோ எல். கிருஷ்ணன், செல்வகுமார் முனியாண்டி, டத்தோ ராஜமாணிக்கம், கல்வியாளர் துரைசாமி, கல்வியாளர் பாலகிருஷ்ணன், தினேஷ் குமார்,  ஸ்ரீ பூரி கல்வி நிலையத்தின் தலைவர் சுரேந்திரன், தொழிலதிபர் மரியதாஸ் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News