Alaioli
பந்தாட்டத்தை தாண்டி ஜொகூரின் எதிர்காலத்தை நோக்கும்தி திஎம்ஜெ – மந்திரி பெசார்.

கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு, மார்.11– சமூக ஊடகங்களில் சமீபமாக பந்தாட்டம் தொடர்பான விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, ஜொகூர் மக்கள் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் (திஎம்ஜெ) அவர்களின் உண்மையான நோக்கத்தையும் பணியையும் நன்கு அறிந்துள்ளனர் என்று தெரிவித்தார்.


இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன என்றாலும், ஜொகூரை முன்னேற்றமான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் திஎம்ஜெ பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் என்று அவர் கூறினார்.


ஜொகூர் தருல் தக்சீம் (JDT) அணிக்காக திஎம்ஜெ எப்போதும் உயர்ந்த தரநிலையை நிர்ணயித்ததுடன், அதே தரநிலையை மாநில நிர்வாகத்திற்கும் வலியுறுத்தி வருகிறார் என்றும் மந்திரி பெசார் தெரிவித்தார். மேலும், ஜொகூரின் எதிர்காலம் தரமான கல்வியின் மூலம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ‘Sekolah Rintis Bangsa Johor’ போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.


இளைஞர் மேம்பாட்டிற்காக ‘Tunku Mahkota Ismail Youth Centre’ மற்றும் ‘Southern Volunteers’ போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சிக்காக ஜொகூர்–சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (JS-SEZ) வழியாக தரமான முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.


இந்த முயற்சிகளின் விளைவாக ஜொகூரில் கடுமையான வறுமை பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், 20,000க்கும் மேற்பட்ட குறைந்த விலையிலான வீடுகள் கட்டப்பட்டு ஜொகூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ‘Infaq Jumaat Johor’ முயற்சியும் சமூக அக்கறையின் அடையாளமாக உருவானது என்று அவர் தெரிவித்தார்.


திஎம்ஜெ யின் காட்சி பந்தாட்டத்தை மட்டும் சார்ந்ததல்ல; கல்வி, இளைஞர் மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் மக்களின் நலன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது என்றும் மந்திரி பெசார் கூறினார்.


எனவே, ஜொகூர் மக்கள் ஒற்றுமையுடன் இருந்து, எதிர்கால தலைமுறைகளுக்காக மேலும் முன்னேற்றமான ஜொகூரை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். “ராஜாவும் மக்களும் பிரியாதவர்கள்” என்ற ஜொகூரின் அடிப்படை உணர்வை காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News